மன்னார் மடு திருத்தல பெருவிழா ஆரம்பம்!

Thursday, July 26th, 2018

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மடு திருத்தல ஆவணி மாதப் பெருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந் நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக மன்னார் மாவட்டச் செயலர் கி. அ.மோகன்ராஸ் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மடுத் திருத்தல பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் உரையாற்றுகையில்
வருடந்தோறும் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் மடுத் திருத்தல ஆவணி பெரு விழாவானது எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்று வந்த மடு பெருவிழாவின் போது மன்னார் மாவட்ட செயலகம் உட்பட அனைத்து திணைக்களங்களும் சகல விதமான உதவிகளையும் செய்து வந்துள்ளன. இம்முறை கடந்த காலங்களை விட அதிகமான பக்தர்கள் மடு பெருவிழாவுக்கு வருகை தருவற்கு ஆவலாக உள்ளனர். அதாவது மடு பெரு விழாவுக்கு வருகை தருவோர் அங்கு இருக்கும் வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை வைத்து எங்களால் எவ்வளவு பக்தர்கள் வருகை தர இருப்பதாக கணிக்க முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
உபகாரிகளின் வீடுகளைத் தவிர 150 வீடுகளுக்கு இதுவரை 800 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டைத் தவிர இம்முறை ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தரக்கூடும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனால் சகல அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான சகல ஆயத்தங்களையும் சகல திணைக்களங்களும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. மின்சாரத்தைப் பொறுத்தமட்டில் அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க 55 மில்லியன் ரூபா செலவில் மின்சார வேலைகள் தற்பொழுது மடுவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பக்தர்கள் தொகை அதிகரிக்கும்போது இவர்கள் காட்டுப் பகுதியில் முகாம் இடுவதால் ஆபத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் வன இலாகப் பகுதியினருடன் இணைந்து இம்முறை நாங்கள் காட்டுப் பகுதிகளை துப்பரவு செய்து பக்தர்களுக்கு வசதியாக முகாம் அமைப்பதற்கு இடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றது என்று குறிப்பிட்டார். அத்துடன் முக்கிய தேவைகளில் ஒன்றான பொது மலசலகூடங்களை அதிகமாக அதாவது 50 மலசலகூடம் கடந்த ஆடிப் பெருவிழாவுக்குப் பின் அமைக்கப்பட்டுள்ளன.
ஆகவே நீர், மலசலகூடம், தங்குமிட வசதிகள் இம்முறை பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் ஏனைய விடயங்களையும் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட சகல திணைக்கள உயர் அதிகாரிகளும், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டனர்.

Related posts: