மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பிராந்திய நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் – உலகத் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Monday, December 6th, 2021

மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த, பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒருங்கிணைய வேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்து சமுத்திரப் வலயமானது, மனிதக் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் நிலையமாகக் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபததி மேலும் கூறுகையில் –

போதைப்பொருள் வர்த்தகமானது பிராந்திய நாடுகளுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளது. புலனாய்வுப் பிரிவுகள், கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாகவே இதனை வெற்றிகரமாக முறியடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும், அதற்கு சகல நாடுகளின் ஒருங்கிணைப்பே தேவைப்படுகின்றது.

இது தொடர்பில் மிகக் கவனமாகக் கண்காணித்து அதனை ஒழிக்காவிட்டால் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பன இலகுவில் இன்னுமோர் இனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே

கொரோனா தொற்றின் பின்னர் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, வல்லரசு நாடுகள் உதவ வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய ஜளாதிபதி இந்த தொற்றினை எதிர்த்துப் போராடுவதற்கு உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக அதிக செலவை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பொருளாதாரச் செயற்பாடுகளின் மந்தகதியால், உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றன கடுமையான சவால்களை சந்தித்துள்ள நிலையில் அனைத்துப் பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் வரையில், கொரோனா தொற்றுப் பரவல் இல்லாமல் போகப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: