மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவுக்காக காத்திருக்கும் மதுவரித்திணைக்களம்!

Tuesday, May 5th, 2020

எதிர்வரும் மே 11 ஆம் திகதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் மதுபான விற்பனையகங்களை திறப்பதற்கான உத்தரவுக்காக காத்திருப்பதாக மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மதுபான விற்பனையகங்களை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரையை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மதுபான விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளமையால் மதுவரி திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு 500 மில்லியன் ரூபாய் நட்டமேற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் மதுபான விற்பனையகங்கள் மூடப்பட்ட காலத்தில் 20 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாகவும் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுவரெலியா மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள மதுபான விற்பனையகங்களில் மதுவகைகளின் கையிருப்பு தீர்ந்துப்போயுள்ளதாகவும் தகவல்ககள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 20இல் மதுபானவிற்பனையகங்கள் திறக்கப்பட்ட போது முழுமையாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் மீண்டும் மதுபான விற்பனையகங்களை திறக்கும் பரிந்துரை செய்யப்பட்டால் அங்கு மதுபானங்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: