இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தூதர் பாராட்டு – 2024 க்கு முன்னர் காணாமல் போனோர் விசாரணைகள் நிறைவடையும் எனவும் நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022

அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று (03) நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனை தெரவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும், சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தூதுவர் பாராட்டினார்.

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் தூதுவர் பாராட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், இலங்கையில் புதிய அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காகவும், இது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காகவும் அமைச்சருக்கு தூதுவர் தனது நன்றியை தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவைகள் உள்ளிட்ட நலன்புரி திட்டங்களுக்கும் தூதுவர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

Related posts: