மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கானதாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Tuesday, May 3rd, 2022

மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமய வழிபாடுகளில் நோன்புப் பெருநாள் சிறப்பானதொரு கொண்டாட்டமாகும்.

ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் மார்க்கப் போதனைகளின் படி நற்செயல்களைப்புரிய இது ஒரு மனத் தூண்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணக்கமான ஒன்றுகூடல்கள், கூட்டு சமரசம், தியாகம், தீமையிலிருந்து மீள்வது, நன்மையைக் கடைப்பிடிப்பது போன்ற ஒருவருக்கு ஒருவர் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்காக உலக வாழ்க்கையிலிருந்து சற்று ஒதுங்கி ஆன்மீக சடங்கு முறைகளை நிறைவேற்றுவது ஒரு சிறந்த பணியாகும்.

அதற்காக இந்த ரமழான் நோன்பு காலத்தில் அனைவரும் நற்செயல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரிய விடயமாகும்.

பட்டினியில் உள்ள ஒருவரின் வலியைப் புரிந்துகொள்வதும், தியாக வாழ்வின் மதிப்பை உணர்வதும் இந்த நோன்பு காலத்தில் பெறும் விலைமதிப்பற்ற வாழ்க்கை மதிப்புகளாகும்.

நோன்புடன் தொடர்புடைய உன்னத நற்பண்புகளைப் பின்பற்றி அந்த நோன்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள இஸ்லாமிய மக்களுக்கு அதன் ஆன்மீக சாரத்தை சமூகமயமாக்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது.

முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்திலுள்ள இந்த தருணத்தில் சமூகத்தில் உள்ள பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு அனைவரிடமும் தாம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீதியான அடிப்படையில் உன்னதமான தாய்நாட்டைக் கட்டியெழுப்பும் உறுதியும், கொண்ட நாளாக இந்த ரமழான் பண்டிகை அமைய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சமத்துவத்தின் மகத்தான விடயம் இந்த ரமழான் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ரமழான் நோன்பு காலத்தில் பசித்திருப்பவர்களின் பசியைப் புரிந்து கொள்ளவும், அது பற்றி உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டு வாழ்வதற்கும், மனதைக் கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு சிறந்த வாய்ப்பு ஏற்படுகின்றது.

இந்த சிறந்த வாழ்க்கை முறைகளை ஒரு மாதம் மட்டும் அல்லாமல் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: