மண்ணெண்ணெய் முறைகேடுகளை தடுக்க அவசர சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

Friday, January 26th, 2018

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மண்ணெண்ணெய் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தொடர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மண்ணெண்ணெய்யை முறைகேடாகப் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் சில தரப்புக்கள் போலிப் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இழப்புக்கு மத்தியுpலும் கடற்றொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் குறைந்த விலையில் மண்ணெண்ணெய்யை விற்பனை செய்கிறது. மீனவர்களுக்கோ குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கோ மண்ணெண்ணெய்யை விநியோகிக்கும் நடவடிக்கை வரையறுக்கப்படவில்லை.

இவர்களுக்குத் தேவையான அளவு மண்ணெண்ணெய்யை விநியோகிக்குமாறு சகல நிரப்பு நிலையங்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் மானியத்தை காரணம்காட்டி பெரியளவில் இடம்பெறும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கிலேயே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக அவசர சுற்றி வளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பாக தகவல்கள் கிடைக்குமாயின், அது தொடர்பாக பொலிஸாருக்கு முறையிடலாம். பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் சுற்றி வளைப்புப் பிரிவின் தொலைபேசி இலக்கமான 077 7748 417 என்ற எண்ணுடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: