மக்களுக்கு அவசர எச்சரிக்கை – விசேட வைத்தியர் ஆனந்த விக்ரமசூரிய!

Monday, September 9th, 2019

நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் காலம் தாழ்த்தாமல் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இந்த விடயத்தை தேசிய தொற்று நோய்கள் தடுப்பு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44,193 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான (8,982) டெங்கு நோயாளர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சுத்திகரிப்பதற்கு பொதுமக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள் அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் (non-steroidal anti-inflammatory drugs NSAIDS) மற்றும் ஸ்ரிறொயிட் (Steroid) மருந்துகளைப் பாவிக்க வேண்டாம் என அண்மையில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

டெங்கு நோயின் முதற்கட்ட அறிகுறியான, காய்ச்சல் வந்த நோயாளர்கள் சிலர், இதனை சாதாரண காய்ச்சல் என எண்ணி ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் போன்ற சில மருந்துகளை உட்கொண்டுள்ளனர்.

இதனால் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த நோயாளர்களின் நிலைமை தீவிரமடைந்துள்ளதுடன், அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அவசர எச்சரிக்கை அறிக்கையில்,

அஸ்பிரின் (Aspirin), புருபன் (Ibuprofen), டைக்கிலோபெனாக் சோடியம் (Diclofenac sodium), மெபனமிக் அசிட் (Mefenamic acid) மற்றும் இந்த வகையை சேர்ந்த வேறு ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள், ஸ்ரிரொயிட் வகையை சேர்ந்த மருந்துகளான பிறெட்னிசலோன் (Prednisolone), மீதைல் பிறெட்னிசலோன் (Methylprednisolone) மற்றும் டெக்ஸாமெத்தசோன் (Dexamethasone) ஆகிய மருந்துகளை காய்ச்சல் வந்தவர்கள் உட்கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் வைத்தியர்களின் பரிந்துரைகள் இன்றி இவ்வாறான மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கை இராணுவத்தின் தியாகபூர்வமான பங்களிப்பை புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாது – வாழ்...
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது - புதிதாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோய...
40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்தது எரிந்து நாசம் - உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவ...