ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடில் போராட்டம் தொடரும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்!

Wednesday, November 2nd, 2016

இரு மாணவர்களின்  படுகொலை தொடர்பில் நாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் எமது போராட்டம் ஒரு மாத காலத்திற்குத் தற்காலிகமாகக் கைவிடப்படுகிறது. ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடில் போராட்டம் தொடரும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே. ரஜீவன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் ஐனாதிபதியுடன் இடம்பெற்ற  விசேட சந்திப்பின் போது மாணவர்களினால் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை(02) காலை யாழ்.பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாங்கள் சிறுபான்மை சமூகமாக, பலவீனமான சமூகமாக இருந்து கொண்டு பெரியவளவிலான நடவடிக்கைகள் எதுவும்  மாணவர்களினால்  எடுக்கமுடியாது.  எங்களுடைய வரலாற்றில் எத்தனையோ, வலிமையானவர்கள் போராட்டம் மேற்கொண்டதுடன், பேச்சுவார்த்தைகள் நடாத்திய போதும் தீர்வு எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

மாணவர்கள் கொல்லப்பட்டமை ஒரு முக்கிய பிரச்சினை. ஆகவே, ஜனாதிபதியிடம் எங்களுடைய பிரச்சினையைக் கொண்டு சென்றால் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.

எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. உரிய தீர்வு கிடைக்காவிடில் ஒருமாதத்திற்குப் பின்னர் எங்களுடைய போராட்டம் ஏதோவொரு வகையில் தொடரும்.

ஒரு வார காலத்திற்குள் மாணவர்களின் படுகொலை தொடர்பான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்து இரு வாரங்களுக்குள் குற்றப் பத்திரிகையைச் சமர்ப்பிப்பதற்கு நீதித் துறையிடம் கோரிக்கை முன் வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

unnamed

Related posts: