மக்களின் வாக்குகளால் ஆட்சியமைக்க முடியாதவர்களே வேறு வழியில் முயற்சி – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு!

Thursday, July 28th, 2022

மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்க முடியாதவர்களே வேறு வழியில் அதனை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சியை கைப்பற்றுவது எப்படியென சில தரப்பினர் சிந்திக்கின்றனர். அவ்வாறானவர்களே வன்முறையை நியாயப்படுத்துகின்றர் என்ரென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்முறைகளை யாரும் நியாயப்படுத்த முடியாதென தெரிவித்த அமைச்சர், அவ்வாறானவர்களே யாழ்ப்பாணம் நூல் நிலையம் தீப்பற்றி எரிந்த போது கை கொட்டிச் சிரித்து மகிழ்ச்சி கொண்டாடியவர்களென்றும் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் –

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது. யார் அதனை செய்தாலும் தவறு தவறுதான். தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தையும் மக்கள் கருத்தையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. சிறந்த முறைமை ஒன்றை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கிப் பயணிக்கச் செய்வதே இன்றைய தேவையாக உள்ளது.

ஜனநாயக ரீதியில் ஆட்சியைப் பிடிக்க முடியாதவர்களே ஆர்ப்பாட்டத்தின் மூலம் அதை சாதித்துக் கொள்ளப் பார்க்கின்றனர். இது திட்டமிடப்பட்ட ஒரு செயற்பாடு. போராட்டத்துக்கு நாட்டை ஒப்படைக்க முடியாது. அவ்வாறு ஒப்படைத்தால் தொடர்ந்தும் அடுத்தடுத்து வரும் போராட்டக்காரர்களும் அதனையே மேற்கொள்வர்.

நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவென காலிமுகத்திடலில் திரண்ட ஒரு இலட்சம் மக்களிடம் நாட்டை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றாரா?

பிரச்சினைகள் இதுவானாலும் அரசியலமைப்பின் மூலமாகவே அவை தீர்க்கப்பட வேண்டும். அதனை நிராகரித்து எதனையும் செய்ய முடியாது. அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களே இன்று அதற்கு எதிராக செயற்படுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆரம்பத்தில் செயல்பட்ட விதத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் கடந்த 9 ஆம் திகதிமுதல் அது வன்முறையாக மாறியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

12 மணி நேரத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதுவா மக்கள் விருப்பம்? மக்களா அதனை செய்தார்கள்? என கேட்க விரும்புகின்றேன்.

காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு சென்றவர்களுக்கு சிகிச்சை வழங்குவதைத் தடுத்தனர். அங்கும் அவர்களைத் தாக்க முயன்றனர். அதைப் பற்றி அங்கு யாரும் பேசவில்லை. காயமடைந்தவர்களை அழைத்துச் செல்வதற்கு வந்த அம்பியூலன்சையும் தடுத்தனர். அது தொடர்பில் எவரும் பேசவில்லை.

இப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தியதை வன்முறையென கூறுகின்றனர். ஒன்றை சரி என்றும் இன்னொன்றை தவறென்றும் எவ்வாறு கூற முடியும்? தவறு என்றால் எல்லாம் தவறுதான் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: