மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Sunday, December 10th, 2023

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய வருடந்தோரும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் நினைவுகூரப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த வருடத்துடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் எதிர்காலத்தில் மனித உரிமைகளையும் கலாசாரத்தையும் ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைநிறுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நினைவுகூறப்படுகின்றது.

அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதே இந்த பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன் அனைவரும் சுதந்திரமானவர்கள் மற்றும் சமத்துவமானவர்கள் என்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகின்றது.

1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது.

அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து விடயங்களிலும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அனைத்து நாடுகளினதும் பொறுப்பு என 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இன்நிலையில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை வாழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனித உரிமைகள் தினத்தில் விடுத்துள்ள செய்தியில் உறுதியளித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் மிகவும் பாதிப்படைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது உலக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக பன்னாட்டு மன்னிப்பு சபை போன்ற உலகின் முக்கிய மனித உரிமைகள் நிறுவனங்களும், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை நிறுவனங்கள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கவலை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு மனித உரிமை தொடர்பில் முழுமையான தெளிவின்மை குறித்து கவலையடைய வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் மனித உரிமை கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியே?

அண்மைக்காலமாக இடம்பெற்றும் சம்பவங்களை அவதானித்தால் இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருவது தெளிவாக புலப்படுகின்றது.

இதேவேளை இந்த வருடத்துக்கான சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கறுப்பு தினமாக அறிவித்து வடக்கு கிழக்கு தழுவிய போராட்டங்களை  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கமும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: