மக்களின் நம்பிக்கையை இழக்கும் காவல்துறை – ஒழுக்கம் பேணவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்து!

Saturday, November 19th, 2022

சட்ட ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக, இலங்கை காவல்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு காவல்துறைமா அதிபர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கடந்த வார இறுதியில் பாணந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்தியமைக்கான காரணங்களை நியாயப்படுத்துமாறும் காவல்துறைமா அதிபரிடம் அந்த ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

களுத்துறை தலைமை காவல்துறை பரிசோதகர் இரண்டு பெண் காவல்துறை உத்தியோகத்தர்களை தள்ளிவிட்ட சம்பவம் குறித்தும் அமைதிப் பேரணியை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி பங்கேற்றவர்களை கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, களுத்துறையில் இருந்து புறப்பட்ட அமைதிப் பேரணி பாணந்துறையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதை, தமது ஆணைக்குழுவில் பாணந்துறை காவல்துறை தலைமைப் பரிசோதகர் ஒப்புக்கொண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பேரணியை கட்டுப்படுத்தியதற்கான காரணம் என்ன? யாருடைய கட்டளை அல்லது உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன? என்பவை குறித்து ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்குமாறு காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், பாணந்துறை காவல்துறை பிரிவிற்கான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தேவையான கட்டளைகளை வழங்கி பேரணியில் பங்குபற்றியவர்களை பாதுகாக்க தவறியுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, அண்மைக்காலங்களில் காவல்துறையினரின் பொருத்தமற்ற நடத்தை மக்களின் நம்பிக்கையை அழித்துள்ளது. அத்துடன் சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பையும் விரைவாக அழித்து வருவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: