மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது அரச கொள்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டியது அவசியம் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, March 25th, 2021

தனி நபர் ஒருவரின் அல்லது ஒரு சிலரின் தவறு காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்படும் வகையில் சட்டங்கள் வகுக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மோசடிக்காரர்கள் மற்றும் மோசடி வர்த்தகர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வருவதற்கு தேவையான சட்டங்களை வகுக்க வேண்டுமானால் அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று உண்மையான மக்களின் பிரச்சினைகளை இனங்காண வேண்டும் எனவும் பணித்துள்ளார்.

ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் எளிமையாக வாழ்ந்துவரும் அப்பாவி மக்களையும் திருடர்களாக பார்ப்பது கிராமத்திற்கு செல்லாத அதிகாரிகளே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது சுற்று நிரூபங்களுக்குள் மட்டுப்பட்டு இருக்காது அரச கொள்கையின் பிரகாரம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் மக்களின் பிரச்சினை ஒன்றை முன்வைக்கின்றபோது மற்றுமொரு பிரச்சினையை காரணமாக வைத்து அதனை மூடி மறைக்க அதிகாரிகள் முயற்சிக்கக் கூடாது. மக்களின் பிரச்சினைகள் முன்வைக்கப்படும்போது கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் பார்த்து அவற்றை கைவிடக்கூடாதென்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் மக்களின் பிரச்சினைகள் பரம்பரை பரம்பரையாக செல்வதற்கு இடமளிக்கக் கூடாது என்றுமு; சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அரசாங்கம் அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் பொதுமக்களுக்காகவே திட்டமிட்டு இருப்பதாகவும் சுற்றாடல் அபிவிருத்தி உட்பட அனைத்து துறைகளிலும் மக்களை வாழ வைக்கும் பொறுப்புக்கு முன்னுரிமை அளித்திருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: