மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் முடிகிறது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Wednesday, October 3rd, 2018

மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் ஆட்சி காலம் நிறைவடைய இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

பண்ணையாளர்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள் நேற்றுமுன்தினம் கிளிநொச்சியிலுள்ள அறிவியல்நகர் கால்நடை பயிற்சி வளாகத்தில் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கால்நடை வளர்ப்பாளர்கள் பலருக்கு எங்களது குறித்தொதுக்கப்பட்ட நிதியில் உதவிகள் மேற்கொண்டுள்ளோம். ஆனால் மக்களால் முன்வைக்கப்பட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை முன்மொழிவுகளை மாகாணசபை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் மாகாணசபையின் ஆட்சிக் காலமும் நிறைவடைய இருக்கின்றது என்று தெரிவித்த வை தவநாதன் பால் உற்பத்தியை பொறுத்தளவில் மக்கள் இன்னும் சந்தைப்படுத்தல் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். தென்னிலங்கை பால் உற்பத்திகள் எமது பிரதேச பண்ணையாளர்களுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைவாக பண்ணையாளர்கள் சிரமமின்றி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு எதுவாக வழிமுறைகளும் ஏற்படுத்தப்படுவதோடு எமது மக்களும் பக்கட்டு பால்மா வகைகளில் வெளிக்காட்டும் ஆர்வம் பசுப்பால் கொள்வனவிலும் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

 

Related posts: