மகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிக்குமாறு இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்து!
Thursday, March 4th, 2021
மகா சிவராத்திரி தினத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சைவ மக்களின் சிறப்பு விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சிவராத்திரி நோன்பினை இந்து ஆலயங்களில் சிறப்புற நிகழ்த்துவதற்கு ஊக்கம் நல்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய இலங்கையில் சைவ தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை மையப்படுத்தி, விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
இதன்போது, சைவச் சிறார்கள் ஆலயங்களுக்குச் சென்று மகா சிவராத்திரி நோன்பின் பெருமையை உணர்ந்து வழிபாடுகளில் ஈடுபடவும், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பக்தி சார்ந்த கலை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
இந்நாளில், இந்து பக்தர்கள் சிவராத்திரி நோன்பினை பக்திபூர்வமாக அனுஷ்டித்து தெய்வீக அருள் ஒளி எங்கும் நிறைய வழிபாட்டில் ஈடுபடுவர்.
மகா சிவராத்திரி விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட கோயில்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


