ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாளை சமர்ப்பிப்பு!

Thursday, November 11th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, பிற்பகல் 2 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் 2 ஆவது வரவு – செலவுத் திட்டம் இதுவென்பதுடன் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கன்னி வரவு – செலவுத் திட்டமாகவும் இது அமைந்துள்ளது.

இதேவேளை சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையில் இதுவரை 75 வரவு – செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாளை முன்வைக்கப்படவுள்ள வரவு -செலவுத் திட்டமானது 76 வரவு – செலவுத் திட்டமாகும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நிதி அமைச்சு பதவியை வகித்து, வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்யும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

பஷில் ராஜபக்ஷவிற்கு முன்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே நிதி அமைச்சராக செயற்பட்டார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தகாலப்பகுதியில் நிதி அமைச்சும் அவர் வசமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக இதுவரை 11 வரவு – செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளார்.

நாளை வரவு – செலவுத் திட்ட உரையின்போது பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமதுரையின்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெளிவுப்படுத்தவுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று நிலையென்பதால் முழுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வரவு – செலவுத் திட்ட தொடர் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நாளையதினம் 12 ஆம் திகதி நிதி அமைச்சரின் உரை மட்டமே இடம்பெறும் அதேவேளை நவம்பர் 13 ஆம் திகதிமுதல் 2 ஆம்வாசிப்புமீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன் 23 ஆம் திகதிமுதல் அமைச்சுகளுக்கான நிதி ஓதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன் ஞாயிறு மற்றும் பௌர்ணமி விடுமுறை தினங்களைத்தவிர ஏனைய நாட்களில் சபை தொடர்ச்சியாகக் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாதீட்டில் துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும் இவ்வருட பாதீட்டு திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இம்முறை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 5 ஆரத்து 134 பில்லியன் ரூபாவாகும்.

இதில் ஆயிரத்து 521 பில்லியன் ரூபாவை, கடனை மீளச் செலுத்துவதற்கு செலவிடப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் அரச ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்க 980.2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தப் பாதீட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.

கொரோனா நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவும், பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரிவுபடுத்தவும், மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிக்கவும் வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: