போலித் தேசியவாதிகளின் காலச் சூழலுக்கு ஒத்துவராத சிந்தனைகளைத் தூக்கி எறிவோம் – சமூக அக்கறையாளர்கள் வலியுறுத்து!

Monday, May 13th, 2024

தமிழ் அரசியல் களத்தில் இருந்துவரும் போலித் தேசியவாதிகளின் புதுப்பிக்கப்படாத சிந்தனைகளும் தற்போதைய காலச் சூழலுக்கு ஒத்துவராத பொறிமுறைகளும் தூக்கி எறியப்படவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள பொதுநலன் விரும்பிகள், உண்மை நிலையை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் தமது அரசியல் வழிமுறையையும் தலைமையையும் மாற்றியமைப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் வடமராட்சி பிரதேசத்தை உள்ளடக்கிய பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிகளின் கட்சியின் பொறுப்பாளர்கள் வட்டார செயலாளர்கள் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு 11 ஆம் திகதியன்று பருத்தித்துறையில் நடைபெற்றது.

இதன்போது பொதுநலன் விரும்பிகள் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் –

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக கூறிவருவது போன்று உண்மையில் எமது மக்கள் தோல்வியடையவில்லை ஆனால் அவர்கள் வைத்திருந்த அதீத நம்பிக்கைகளே தோற்றுப்போயுள்ளன.

குறிப்பாக உரிமைகளை பெற்றுத்தருவதாக கூறி கடந்தகால தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் ரீதியான வழிநடத்தல்களையும் ஆயுத வழியிலான போராட்டங்களாலும் உரிமை கிடைத்துவிடும் என்ற அவர்களது அதீதமான நம்பிக்கையே தோற்றுப்போயுள்ளது.

ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி அன்றுமுதல் இன்றுவரை ஒரே கருத்தையே கூறிவருகின்றது. அவர்களது அரசியல் கொள்கைகளும் அதை அவர்கள் முன்னெடுக்கும் வழிமுறைகளும் தவறான வழிமுறையில் தமிழ் மக்களை வழி நடத்தவும் இல்லை, முயற்சிக்கவும் இல்லை என்பதை தற்போது தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்கள் உணர்ந்துவருகின்றனர்.

அந்த வகையில் தோற்றுப்போன அரசியல் வழிகாட்டிகளின் புதுப்பிக்கப்படாத சிந்தனைனகளையும் காலச் சூழலுக்கு ஒத்துவராத பொறிமுறைகளையும் தொடர்ந்தும் பற்றிப் பிடித்தக்கொண்டிராது ஜதார்த்தத்தை புரிந்துகொண்டு மக்கள் தம்மை மாறுதலுக்குள்ளாக்கி பயணிக்க வேண்டியது அவசியமாகின்றது

அத்துடன் தற்போதைய காலச் சூழலில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்க தேசிய நல்லிணக்கமென்னும் வழிமுறையையே சாத்தியமாக்குவது அவசியம்.

மறுபுறம் இந்த தேசிய நல்லிணக்கத்தை பல வருடங்களாக முன்னெடுத்து வெற்றிகண்டவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார். அந்தவகையில் அவரின் வழிநடத்தலே தமிழ் மக்களுக்கு இன்றுள்ள அரசியல் சூழலுக்கும் பொருத்தமானதாக உள்ளது.

இந்த உண்மை நிலையை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் தமது அரசியல் வழிமுறையையும் மாற்றியமைப்பதும் காலத்தின் தேவையாக இருக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: