போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் – தீ வைப்பது இலகுவானது, அதனை மீளக் கட்டியெழுப்புவது கடினம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, October 28th, 2022

பாரிய போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் எனவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டுக்கு தீ வைப்பது இலகுவானது, ஆனால் அதனை மீளக் கட்டியெழுப்புவது கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை  மக்களை தூண்டிவிட்டு எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. சிலர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், அவர்கள் வேண்டுமென்றே நாட்டுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது மக்களுக்கும் முழு நாட்டிற்கும் பாரிய சவாலாக மாறியுள்ளது.

சிலர் நிலைமையை சுரண்டிக்கொண்டு பொறுப்புகளை ஏற்காமல் பிரச்சினைகளை தீர்க்காமல் தூண்டிவிடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நாட்டை கட்டியெழுப்பும் தரப்புக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர அழித்தவர்களுக்கு பக்கபலமாக அல்ல.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணாவிட்டாலும், தற்போதைய நிர்வாகம் சரியான பாதையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், படிப்படியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தமது அணி தயாராக இருப்பதாகவும், அடுத்து நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் வெற்றியடைவதில் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: