போராடி மரணிக்கவும் தயார் -ஞானசாரர்

Monday, June 26th, 2017

மரணம் எவ்வாறு வரும் என்று தெரியாது. ஆனால் வெறுமனே மரணிக்க நான் விரும்ப வில்லை. பிரச்சினைகளுக்காக முன்னின்று இனத்திற்காக போராடி 100 நாட்கள் உயிர் வாழ்ந்தாலும் போதும்  என ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் ’ எனக்கு உயிரச்சுறுத்தல் உள்ளது. அது குறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எமக்கு மரணம் எவ்வாறு வரும் என்று தெரியாது. ஆனால் வெறுமனே மரணிக்க நான் விரும்ப வில்லை. பிரச்சினைகளுக்காக முன்னின்று இனத்திற்காக போராடி 100 நாட்கள் உயிர் வாழ்ந்தாலும் போதும் என்றே நான் கருதுகின்றேன். இந்த நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தான் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றேன்.

பயணத்தை ஆரம்பித்து தொடரும் போது அட்டைகள் காலில் தொற்றுவது இயற்கையானது. ஆனால் எமது இலக்கு புனிதமானது என்றால் அது வெற்றி இலக்கை அடையும் . இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் அந்த ஆசிர்வாதம் எமக்குள்ளது.

சத்திய தர்மத்தின் வழியிலேயே நாங்கள் பயணிக்கின்றோம். எனவே இன்று திரைக்கு பின்னால் இருந்துக் கொண்டு ஆட்டம் போடும் குழுக்கள் வெளிவரும் நாட்கள் வரும். அந்த காலம் வருகையில் நாங்கள் சில சந்தர்ப்பங்களில் மரணித்திருப்போம்.ஆனால் மக்கள் எமக்கு சிலை செய்வார்கள். எமது எச்சரிக்கையை பொருட்படுத்தாமையின் விளைவே இது என்று ஒருநாள் உணர்வார்கள்.

பிளவுப்பட கூடிய அனைத்து விடயங்களும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. முகத்தை மறைத்தல் தாடி வளர்த்தல் உணவு முறைமை ஹலால் மயமாக்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாட்டிற்கு அழிவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அறிவுசார்ந்த முஸ்லிம் சமூகம் இந்த பிரச்சினையை பேசுவதற்கு முன்வர வேண்டும். அப்போது தான் தீர்வை எட்ட முடியும். இலங்கையை போன்று நல்லிணக்கம் மிக்க உயிரச்சுறுத்தல் அற்ற நாடு முஸ்லிம்களுக்கு உலகில் வேறு எங்குமே இல்லை’ என்றார்

Related posts: