போதைப்பொருள் பாவனை பரவலடைவது தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம்!

Monday, July 1st, 2019

போதைப்பொருள் பாவனை பரவலடைவது தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள பிரதான நிகழ்வில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி, தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை மற்றும் காவற்துறை என்பன இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளன.

இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட  1,695 கிலோகிராம் சட்டவிரோத போதைப்பொருட்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு  தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் கீழ் அமுல்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை பல்வேறு வகையான 24,818 கிலோ 393 கிராம் 767 மில்லிகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹெரோயின் விஷ போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒரு லட்சம் பேர் வரை நாட்டில் வசிப்பதாக போதைப்பொருள் புனர்வாழ்வுக்கான தேசிய அதிகார சபையின் ஆலோசகர் சமன்த கிதலவஆராச்சி தெரிவித்துள்ளார்.

அதில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 50 ஆயிரம் பேர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: