குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் – செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதில் இதுவே இடையூறு என அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Monday, November 22nd, 2021

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் கடந்த 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தெரியவந்தது.

இதனடிப்படையில் சிரேஷ்ட மட்டத்தில் 18 வெற்றிடங்களும், மூன்றாம் நிலையில் 113 வெற்றிடங்களும், இரண்டாம் நிலையில் 121 வெற்றிடங்களும், முதல் நிலையில் 19 வெற்றிடங்களும் வேறு பதவியில் ஒரு வெற்றிடமும் காணப்படுகின்றன.

இந்த வெற்றிடங்களினால் திணைங்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதில் இடையூறுகள் ஏற்பட்டிருப்பதாகவும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்ததுடன் இதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு பரிந்துரைத்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டுமுதல் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட “இலத்திரனியல் பயண அங்கீகார’ முறையானது, மேலும் விரிவான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா சேவையை வழங்கும் நோக்கில் புதுப்பிக்கப்படவில்லை என்பது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

எனவே, இந்தக் கட்டமைப்பை நவீனமயமாக்குவது குறித்தும், நவீன உலகத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறித்தும் குழு கேள்வி எழுப்பியது. குறித்த கட்டமைப்பைப் புதிப்பிக்கும் விடயம் பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில் இதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது விடயம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும், கடந்த 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டு திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு வாகனங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகிய போதும் அவை மீண்டும் திருத்தப்பட்டு பயன்படுத்தப்படாமையும் இங்கு தெரியவந்தது.

காப்புறுதி நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும், திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் காப்புறுதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: