போதைப்பொருளுக்கு அடிமையான மேலுமொரு இளைஞர் உயிரிழப்பு – பாடசாலை மாணவர்கள் சிலரும் போதைப்பொருளுடன் கைது!

Sunday, September 25th, 2022

போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த நிலையில் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்தார்.

மருத்துவ பரிசோதனையிலும் அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்டமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கூலிக்காக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் கடந்த 6 மாதங்களில் 10 இற்கும் மேற்பட்டோர் ஹெரோயினுக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதி ஆலய கேணியடியில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறை புலனாய்வு பிரிவினர் மாணவர் ஒருவர் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்தனர். ஏனைய மூவரும் மதுபானம் அருந்தியவாறு இருந்தனர்.

நால்வரை கைது செய்து யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு வருகை தந்ததாகவும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபானம் அருந்தியதாகவும் மாணவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

அவர்கள் க.பொ.த சாதாரணதரத்தை முடித்து தற்போது உயர்தரத்தில் கல்விபயிலும் 17, 18 வயதுடையவர்கள் என விசாரணையில் கண்டறியப்பட்டது.

மாணவர்களின் பெற்றோரை அழைத்து மூத்த காவல்துறை அத்தியட்சகர், பிள்ளைகள் தொடர்பில் கண்காணிப்பு இல்லையா என எச்சரித்தார்.

பாடசாலையில் பயிலும் மாணவர்களை நீதிமன்றில் முற்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதனால் ஏற்படும் பாதகநிலை தொடர்பில் எடுத்துரைத்த மூத்த அவர், அவர்களை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைதிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் எந்தவொரு நோயாளியும் கைவிடப்படவில்லை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்...
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
முச்சக்கரவண்டிகளை முழுமையாக ஒழுங்குபடுத்திய பின்பே இரட்டிப்பு எரிபொருள் - எரிசக்தி அமைச்சர் கஞ்சன வி...