முச்சக்கரவண்டிகளை முழுமையாக ஒழுங்குபடுத்திய பின்பே இரட்டிப்பு எரிபொருள் – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022

மக்கள் போக்குவரத்துக்கான முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பதற்கு முன்பதாக முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்தலுக்குட்படுத்துவது அவசியமென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டிகளை முறையான ஒழுங்குபடுத்தலுக்கு உட்படுத்தாமல் எரிபொருள் கோட்டாவை அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் பெற்றுக்கொடுப்பது முடியாத காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் கோட்டாவை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்கள் போக்குவரத்துக்கான முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது ஐந்து லீற்றர் எரிபொருளே வழங்கப்பட்டு வருகிறது. அதுதொடர்பில் நாம் முறையான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்ட பின் போக்குவரத்து அமைச்சினூடாக அதற்கான கோட்டாவை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

தற்போதைய சூழ்நிலையில் முச்சக்கரவண்டிகள் பதிவுகள் இல்லாமல் ஒழுங்குபடுத்தலுமின்றி நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கோட்டாவை அதிகரித்து வழங்க முடியாத நிலையில் உள்ளது.

தற்போது எம்மிடமுள்ள தரவுத் தொகுதியின் படி நாடு முழுவதும் சுமார் 11 இலட்சம் முச்சக்கரவண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான கோட்டாவை அதிகரிக்க முடியும்.

ஆனால் 10 இலட்சம் அல்லது 09 இலட்சம் முச்சக்கரவண்டிகளுக்கே எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கக்கூடிய நிலை காணப்படுகிறது.

அதற்கு மேல் எம்மால் அதனை அதிகரிக்கமுடியாது. அதுதொடர்பில் நாம் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

எரிபொருளில் கலக்கப்பட்டதாக கூறப்படும் சூழல் மாத்திரை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கமளித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் எரிபொருளில் இதனை உள்ளடக்குவதற்கு எந்த நிறுவனத்திற்கும் தாம் உத்தரவுகளை வழங்கவில்லை அல்லது அனுமதியை வழங்கவில்லை எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, இந்த மாத்திரைகள், பெட்ரோலின் ஒக்டேய்ன் அளவை அதிகரிப்பதுடன், எரிபொருளில் கந்தகத்தை குறைக்கிறது மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: