போதியளவு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, March 23rd, 2022

மக்களுக்கு அவசியமான எரிபொருளை, உரியவாறு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அவசியமான அளவு எரிபொருள், நேற்றும், நேற்றுமுன்தினமும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, உலக சந்தையில் எரிபொருட்களின் விலை பாரியளவில் குறைவடைந்தால், உள்நாட்டிலும் அதன் விலையைக் குறைக்கத் தயர் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த பெப்ரவரி மாதம் இருந்த விலையின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரைன் யுத்தம் காரணமாக, மார்ச் மாதத்தில் சர்வதேச சந்தையில், எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலர் வரை அதிகரித்தது.

ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், பெருமளவில் விலை குறைப்பு இடம்பெற்றால், தாங்களும் விலை குறைப்பை செய்யத் தயார் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால், நேற்றையதினமும், வாகனங்களும், பொதுமக்களும் நீண்ட வரிசைகளில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: