சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!

Thursday, May 18th, 2023

அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்தை முறையாக அமுல்படுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை விஞ்சி பொருளாதார சுபீட்சத்தை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலம் தொடர்பாக இளைஞர்கள் எழுப்பியுள்ள கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு கூட்டு முயற்சியின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

வளமான பொருளாதாரத்தை உறுதிப்படுத்த அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அமைச்சின் செயலாளர்கள் தமது அதிகார வரம்பிற்குட்பட்ட நிறுவனங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைகளின் மூலதனச் செலவுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான வரவிருக்கும் ஒழுங்கு முறைகளையும், அடுத்த சில மாதங்களுக்குள் உள்ளூர் மட்டத்தில் மின்சார விநியோகம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம், அமைச்சின் செயலாளர்களின் செயற்பாடுகள் மற்றும் பொது நிறுவன நல்லிணக்கம், பொதுச் சேவை முகாமைத்துவம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக இந்த சந்திப்பின் பொது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இடைக்கால வரவுசெலவு திட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023 வரவுசெலவு திட்டத்தின் கொள்கை மாற்றங்கள் தொடர்பான சட்ட திருத்தங்கள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கான கடமைகள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: