பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலில் மாணவனின் கால் முறிவு – வடமராட்சியில் சம்பவம்!

Wednesday, May 29th, 2019

வடமராட்சியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவன் ஒருவரைத் தாக்கியதில் அவர் அப்பகுதியில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலைத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

துன்னாலை தெற்கு கரவெட்டிப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவனே கால் முறிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் மாணவனின் தந்தைக்கும் இடையில் இருந்த சிறு முரண்பாட்டினை அடுத்து பழி வாங்கும் நோக்கில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மாணவனை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலதிக விசாரணைகளை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: