நிறைவுக்கு வருகிறது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை!

Wednesday, March 10th, 2021

கடந்த முதலாம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் பரீட்சை மண்டபத்துக்கு வெளியில் குழப்பகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், குழப்பங்கள் ஏற்படுவதனை தடுக்கும் வகையில், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அனைத்து பரீட்சை நிலையங்களுக்கு அருகிலும், நடமாடும் பொலிஸ் பாதுகாப்பு சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பரீட்சை நிலையத்திலோ அல்லது அதன் சுற்றாடலில் குழப்பகரமான வகையில் செயற்பட்டால் அல்லது ஏனைய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டால் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் முதலான நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை இரத்துச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடுகளை முன்வைக்க, பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் 011-2784208, 011-2784537, 011-3188350, 011-3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கம் பொலிஸ் தலைமையகத்தின் 011- 2421111 ஆகிய இலக்கங்களுடனும் பொலிஸ் அவசர பிரிவு 119 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொண்டும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Related posts: