பொலிஸார் விடும் தவறுகளே ஊடகங்களில் செய்தியாகின்றன – அதில் தவறில்லை என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, February 2nd, 2022

யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸாருடைய குறைபாடுகள் தொடர்பாக மக்கள் தமக்கு முறைப்பாடு வழங்கலாம். எனவும், அவ்வாறான முறைப்பாடுகளை ஊடகங்களும் தன்னிடம் சேர்ப்பிக்கலாம் எனவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே கூறியுள்ளார்.

அவரது அலுவலகத்தில் சினேக பூர்வமாக ஊடகவியலாளர்களை சந்தித்தபோது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதனிபோது யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேவிடம் யாழில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸாரின் குறைபாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதேவேளை, சில பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முற்படும்போது அவற்றை முறைப்பாட்டு புத்தகத்தில் பதிவு செய்யாமல் சாதாரண புத்தகம் ஒன்றில் பதிவு செய்வது. முறைப்பாடு பதிவு செய்யும்போது முறைப்பாட்டாளர் கூறிய விடயங்களுக்கு மேலதிகமாக சில விடயங்களை முறைப்பாட்டு புத்தகத்தில் சேர்ப்பது தொடர்பில் மாவட்ட பொலிஸ் அதிபருக்கு கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் முறைப்பாட்டாளர் தான் வழங்கிய விடயங்கள் அனைத்தும் முறைப்பாட்டு புத்தகத்தில் இருக்கிறதா என்பதை சரியாக வாசித்தபின் கையெழுத்திட முடியும். அவ்வாறு முறைப்பாடு புத்தகத்தில் இடம்பெறவில்லை எனில் அதில் கையெழுத்திட வேண்டிய தேவையில்லை.

அது குறித்து பொலிஸ் நிலையத்தில் அல்லது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரமுடியும். பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்கும்போது முறைப்பாட்டுக்கென வழங்கப்பட்ட புத்தகத்திலேயே எழுதவண்டும்.

பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கிலேயே பொலிஸார் தமது கடமைகளை மேற்கொள்கின்ற நிலையில் சில பொலிஸார் தவறு விடுகிறார்கள். அவ்வாறு தவறுகள் விடும் சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் அவற்றை செய்தியாக பிரசுரிக்கின்றன அதில் தவறில்லை.

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நான் இருக்கின்ற நிலையில் யாழ்.மாவட்ட பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் என்னிடம் நேரடியாகவோ அல்லது இதர தொடர்பாடல் ஊடகங்கள் வாயிலாகவோ முறைப்பாடுகளை என் நேரத்திலும் வழங்கலாம்.

பொலிஸார் தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைப்பதைவிட ஊடகவியலாளர்களுக்கே அதிகம் கிடைக்கிறது. ஆகவே பொலிஸ் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு எம்மால் முடிந்தவரை சேவையை வழங்குவதற்கு தயாராக உள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: