பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – 83 இராஜதந்திரிகள் பங்கெடுத்த மாநாட்டில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022

இலங்கையில் பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவின் புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார்.

மேலுமட மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

தற்போதைய அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளக்கங்களின் தொடர்ச்சியாக, புதுடில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் வாய்ப்பை பீரிஸ் பாராட்டினார்.இந்த மாநாட்டில் 83 தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜி.எல். பீரிஸ், மனித உரிமைகள் பேரவையின் 2021 செப்டெம்பர் அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியமையை நினைவு கூர்ந்தார்.

அத்துடன் ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் உணர்வுடன் கூடிய சர்வதேச சமூகத்துடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அமைச்சர் குறிப்பிட்டார்.

இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலைபேறான அபிவிருத்திச் சபை ஆகிய உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளான நல்லிணக்க முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டினார். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என கூறினார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக அரச தலைவரால் நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட நிபுணர் குழு தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.

நிபுணர் குழு தமது பூர்வாங்க ஆலோசனைகளை நிறைவு செய்துள்ளதாகவும், அதற்கான முன்மொழிவுகள் விரைவில் அரச தலைவரிம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர், ஜனநாயக நடைமுறையின் அடிப்படையில் பரந்தளவிலான பொது ஆலோசனைகள் பின்பற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: