பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஜ.நா முழு ஒத்துழைப்பு வழங்கும் – பொதுச் செயலாளர் நாயகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கிய உறுதி!

Saturday, June 24th, 2023

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற ‘புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்’ தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்திடம் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம், காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல்உள்ளிட்ட விடயங்களின் போது இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: