பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Saturday, June 17th, 2023

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற 2018 – 2022 ஆம் கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தேசிய பாடசாலைகளுக்கான ஆயிரத்து 729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து, ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு மொத்தமாக 7 ஆயிரத்து 342 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில், நாட்டிற்குள் 2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக்காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி, மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: