பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் குறுந்தகவல் வசதியை பயன்படுத்தலாம் – யாழ். அரச அதிபர் அறிவிப்பு!

Friday, May 18th, 2018

நாளாந்தம் பெருந்தொகையான பொதுமக்கள் தமது பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் பொருத்தமான ஆவணங்களை சமர்ப்பிக்காமை மற்றும் தேவைக்கான காரணத்தை சரிவர நிரூபிக்க காலதாமதமாதல் போன்ற காரணங்களினால் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது.

மேலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கும்பொழுது சில ஆவணங்களின் தேவைப்பாடு அல்லது அவர்களின் தேவை தொடர்பான தெளிவின்மை அல்லது உறுதிப்படுத்தல்களின் பற்றாக்குறை ஏற்படும் பொழுது அவர்களுடன் சாதாரண கடிதத் தொடர்பாடல் சேவை வழங்கலில் கால தாமதத்தை ஏற்படுத்துகிறது.

மேற்படி குறைபாட்டை நீக்கி பொதுமக்கள் சேவை வழங்கலை துரிதப்படுத்துவதற்காக மாவட்ட செயலகத்திற்கு வரும் பொதுமக்களின் கணினி மயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனூடாக மாவட்ட செயலகத்திற்கு வரும் பொதுமக்களின் மின்னஞ்சல் மற்றும் கைத்தொலைபேசி இலக்கம் போன்ற விவரங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் கணனி மயப்படுத்தப்படும். பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியேற்படின் குறுந்தகவல் சேவையை பயன்படுத்திக் கொள்ள  முடியும். இதன் மூலம் பொதுமக்களும் பின்வரும் நன்மைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

  1. பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள நவீன தொடர்பாடல் வசதிகள் பயன்படுத்தப்படுவதனால் விரைவாக அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
  2. அவர்கள் சேவையைப் பெற நாடவேண்டிய கிளை மற்றும் உத்தயோகத்தர் சேவை நாடுபவருக்கு விரைவாக அடையாளம் காட்டப்படுவதால் விரைவாக சேவையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
  3. பொதுமக்கள் குறிப்பிட்ட கிளையினை சென்றடைய முன் அவருடைய தேவை கிளையினைச் சென்றடைவதால் விரைவாகச் சேவையைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
  4. தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் எத்தனை தடவைகள் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
  5. அரசாங்க அதிபர் மற்றும் உயர் மேலதிகாரிகளின் தொடர்ச்சியானதும் உடனுக்குடனானதுமான கண்காணிப்பின் கீழ் வெளிப்படைத் தன்மையுடன் விரைவாக சேவையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் சிரமம் பாராது வரவேற்பு மண்டபத்தில் தங்களது பெயர் விவரங்களையும் தாம் வந்த நோக்கத்தினையும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதன்மூலம் தங்களுக்கு விரைவானதும் வெளிப்படைத் தன்மையுடன் கூடியதுமான சேவையை வழங்க முடியுமென எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு இரண்டு நிமிடத்தினை பாராது பதிவு செய்து கொள்வதன் மூலம் தங்கள் வரவு மற்றும் தாங்கள் வழங்கிய ஆவணங்கள் கையேற்றப்பட்டமை என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் தங்களுக்கு விரைவான பதில் கிடைக்கப் பெறவில்லையாயின் தாங்கள் 021 222 5000 ஊடாக முறையிட முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என யாழ். அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

Related posts: