பேருந்து மீது தாக்குதல் நடத்திய 12 இளைஞர்களுக்குப் பிணை!

Thursday, December 15th, 2016

பட்டா வாகனத்தில் சென்று பேருந்தை மறித்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இளைஞர்கள் யாழ்ப்பாண நீதிவான் மன்றினால் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் வவுனியாவலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.சபை கரைநகர் சாலைக்குரிய பேருந்தை யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் வழிமறித்த பட்டா வாகனத்தில் வந்த இளைஞர்கள் அதனுள் இருந்த சாரதியையும், நடத்துனரையும் தாக்கி விட்டு கையிலிருந்த பற்றுச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அத்துடன் பெருந்தை தாக்கிச் சேதப்படுத்தியதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பர்டு செய்யப்பட்டது.

இந்தச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த 12 இளைஞர்களைக் கைது செய்து யாழ்.நீதிவான் மன்றில் முற்படுத்தியிருந்தனர். அவர்கள் நீதிமன்றினால் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தின் அடிப்படையில் சந்தேக நபர்களுக்கு பதில் நீதிவானால் பிணை வழங்கப்பட்;டது. எனினும் இந்த வழக்க மீண்டும் நீதிவான் சி.சதீஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேக நபர்கள் அனைவரையும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன் பொதுச்சொத்துக்கள் கட்டளை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லையென தெரிவித்த யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் பரிசோதகரையும் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரியையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் கட்டளையிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் மன்றில் சமூகமாகி இவ்வழக்கு தொடர்பாக மீள் வாக்குமூலங்கள் பதிவ செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி அடுத்த வழக்குத் தவணையின் போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் சந்தேக நபர்களை இந்த மாதம் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேகநபர்களுக்கு எதிராக பொலிஸாரால் குற்றப்பத்திரம் முன்வைக்கப்பட்டது. குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 6 குற்றச்சாட்டுக்களையும் ஏற்பதாக சந்தேகநபர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பிணையில் செல்லுமாறும் சந்தேக நபர்களின் கைவிரல் அடையாளத்தை பெற்று நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிவான் சி.சதீஸ்வரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு தீர்ப்புக்காக தை மாதம் 17ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது.

bail

Related posts: