பேராசிரியர்களிடமிருந்து விரைவில் சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றோம் – கல்வி அமைச்சு நம்பிக்கை!

Sunday, April 9th, 2023

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர், பேராசிரியர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்று சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து விரைவில் சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் சுமார் 2 மாதங்களாக காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் கடந்த வியாழனன்று குறிப்பிட்டதொரு ஆசிரியர் சங்கத்தினால் ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டு சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக 19,000 விண்ணப்பங்கள் கோரப்பட்டன. எனினும், 12,000 பேர் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலைவரம் தொடர்பில் அறிந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக வழங்கப்படும் 500 ரூபாய் மேலதிக கொடுப்பனவை 2000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கும், 81 கிலோ மீற்றருக்கும் அதிக தூரத்திலிருந்து வருபவர்களுக்கான கொடுப்பனவை 2900 ரூபாய் வரை அதிகரிப்பதற்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக திறைசேரியிடமிருந்து மேலதிக நிதியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தவிர பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் கடந்த மார்ச் 9ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது வரிக் கொள்கை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தவிர ஏனைய கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் இணக்கப்பாடும் எட்டப்பட்டிருந்தது. பாராளுமன்றத்திலும் இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

கல்வி அமைச்சு இந்த சிக்கலான பிரச்சினை தொடர்பில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமான நாள் முதல் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கே முயற்சித்தது.

இந்நிலையில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் முற்போக்கான பதிலை வழங்கியுள்ளன. பல்கலைக்கழக பேராசிரியர்களும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் விரைவில் சாதகமான பதிலை வழங்குவர் என்று இலக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும், கல்வி அமைச்சும் எதிர்பார்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மனநிலை பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர்களே பௌத்த பிக்குகளை இழிவுபடுத்துகின்றனர் - அஸ்கிரிய பீட மகாநாயக்கர்...
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலில் இருக்கும் - பொலிஸ்மா அதிபர் அஜித...
கொழும்பில் இடம்பெறும் டாடா நிகழ்வில் பங்கேற்பதற்காக 650 க்கும் மேற்பட்ட இந்திய பிரதிநிதிகள் வருகை!