ஆசிரியையின் இறப்புத் தொடர்பில் துரிதமான விசாரணைகள் வேண்டும் –  இலங்கை ஆசிரியர் சங்கம்!

Monday, May 14th, 2018

கடந்த சில நாள்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக் கொண்ட ஆசிரியை – திருமதி கவிதா ஜெயசீலனின் இறப்புத் தொடர்பாக துரிதமான விசாரணை மேற்கொண்டு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் உள்ளதாவது: உயிரிழந்த ஆசிரியையின் கடந்தகால தரங்கணிப்பீட்டுப் படிவத்தில் புதிய அதிபராகிய தான் கையொப்பமிட முடியாது போனமையே காரணம் என்பதுபோல ஆசிரியை மட்டில் தான்மேற்கொண்ட கொடுமைகளை மறைத்து ஊடகங்களூடாக நடிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அந்த ஆசிரியை 2017, 2018 ஆம் ஆண்டுக்குரிய தரங்கணிப்புப் படிவத்தையும் தான் புதிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கான கோரிப்பெறல் கடிதத்தையுமே அதிபரிடம் கோரியிருந்தார் என ஆசிரியை 01.05.2018 அன்று யாழ்ப்பாண வலயக்கல்வி பணிமனைக்கு சமர்ப்பிக்கவென ஆசிரியையின் கையொப்பத்துடன் எழுதிவைத்திருந்த குடும்பத்தவர்களிடம் உள்ள கடிதத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடமாற்றம் கிடைக்கப்பெற்ற உயிரிழந்த ஆசிரியைக்கு வேண்டுமென்றே அதிபர் துன்புறுத்தியுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கியது கல்வித்திணைக்களமாகும். ஆயினும் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியைக்கு அதிபர் கோரிப்பெறல் கடிதத்தையும் குறித்த ஆண்டுக்கான தரங்கணிப்பையும் வழங்கவில்லை என யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிமனையில் வாய்மூலம் ஆசிரியை முறையிட்டபோது வலயக்கல்வி அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்காத அசமந்தப்போக்கும் ஆசிரியையின் இறப்புக்குக் காரணமாகும். இடமாற்றங்களை வழங்கும் கல்வித்திணைக்கள அதிகாரிகள் இடமாற்றங்கள் தொடர்பான தொடர் நடவடிக்கைகளை அதிபர்கள் செய்யாததைக் கூட தீர்த்துவைக்க முடியாது செயற்பட்டதால் இன்று ஒரு பெறுமதிமிக்க ஆசிரியைத் தாய் உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். அவரது கணவன் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கவலையளிக்கின்றது.

ஆனால் குறித்த ஆசிரியையின் இறப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கல்வி அதிகாரி, வழமையாக பாடசாலைகளில் நடக்கும் விடயங்கள் எனக் கூறி தவறிழைத்தவர் போல நியாயப்படுத்த முயன்றமையையும் ஒரு ஆரோக்கியமான ஆசிரியையை நோயாளியாகக் காட்ட முயன்றமையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆசிரியையை அதிபர் மிக மோசமாக நடத்தியிருந்த போதும் கூட ஆசிரியை பண்பான முறையிலேயே தனது இயலாமையை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் வெளிப்படுத்த முயன்ற தன்மையூடாக ஒரு பண்பான திறமையான ஆசிரியையை கல்விச் சமூகம் இழந்துள்ளமை மிகுந்த வேதனையளிக்கிறது.

வடக்கு மாகாணத்தின் இப்படியான மோசமான நிலையே ஆசிரியர்களை விரக்திக்குக் கொண்டுசென்று தவறான முடிவுகளை ஆசிரியர்களை எடுக்கத் தூண்டுகின்றது. எனவே குறித்த ஆசிரியையின் இறப்புத் தொடர்பான பொருத்தமற்ற திசை திருப்பல் மூலம் கல்வி அதிகாரிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதை விடுத்து குறித்த பாடசாலை அதிபர் தொடர்பாக உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். அதிபரின் தலையீடு அப்பாடசாலையில் உள்ளதால் நீதியான விசாரணையின் பொருட்டு அதிபர் உடனடியாக இடமாற்றப்பட்டு அல்லது வலயக்கல்விப் பணிமனையில் இணைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு விசாரணை மேற்கொள்வதனூடாக ஒஸ்மானியாக் கல்லூரியில் அச்சுறுத்தல் எதுவுமில்லாமல் ஆசிரியர்கள் சுதந்திரமாக சாட்சியம் அளிக்கும் நிலை உருவாக்கப்படும். இந்த விடயத்தில் முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் நேரடியாகவே கவனம் செலுத்தி எவ்வித அரசியல் தலையீடுமற்ற நீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றுள்ளது.

Related posts: