பெனிஸ்டரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு!

Friday, December 13th, 2019

சுவிட்ஸலாந்து தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்பவர் தற்போது சுகயீனம் அடைந்துள்ளதன் காரணமாக அவரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தோன்றி வாக்குமூலம் வழங்க முடியாது என்பதால் சுவிஸ்லாந்து தூதுவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கானியா பெனிஸ்டர் விடுத்த நிலையில் அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சம்பவம் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமான அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது.

இதன் போது அவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடையும் இந்த மாதம் 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்ஸலாந்து தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்பவர் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் மேலதிக அறிக்கை இன்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது அரச சிரேஸ்ட் சட்டத்தரணி ஜனக்க பண்டார கருத்து தெரிவிக்கையில், கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் அது குறித்து மனநல மருத்துவரிடம் பரிசோதித்து வைத்திய அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளவது உகந்தது என தெரிவித்தார்.

இதற்கு அரச சிரேஸ்ட் சட்டத்தரணி நீதிமன்ற அனுமதியை கோரிய நிலையில் அதனை அங்கிகரித்த நீதிமன்றம் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்பவரை மனவள மருத்துவர்களிடம் அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்தும் வாதங்களை முன்வைத்த அரச சிரேஸ்ட் சட்டத்தரணி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற அதிகாரியிடம் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுக்கும் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முழுமையடையவில்லை எனவும் அதனால் இன்றைய தினம் முழுமையான அறிக்கையை மன்றில் சமர்பிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

குறித்த நபர் தொடர்;பில் மனவள மருத்துவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் அது தொடர்பில் நீதிமன்றத்தை தெளிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அரச சிரேஸ்ட் சட்டத்தரணி தெரிவித்தார்.

இதன்போது குறிக்கிட்டு வாதிட்ட கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தனது கட்சிக்காரர் தற்போது சுகயீனம் அடைந்துள்ளதன் காரணமாக அவருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க முடியாதுள்ளதாகவும் அதனால் சுவிஸ்லாந்து தூதுவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைகள அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் தமது தலைமையகத்தை விட்டு வேறு எங்கும் சென்று விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என கூறினார்.

மேலும் அவர் சிறியளவில் நோய் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் முடக்குவாதம் அல்லது அவயவங்கள் செயலற்றுபோன நோயாளி அல்ல எனவும் அதனால் அவருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதில் சிரமம் இருக்காது எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் இந்த மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றத்தை தெளிவுப்படுத்துமாறும் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்க்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடையை இந்த மாதம் 17 ஆம் திகதிவரை நீடிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts: