பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, February 28th, 2024

நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத் துறைக்குள் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கை ஆற்ற  முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண் வர்த்தகர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ‘சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது விழா 2023’ இலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“கடந்த சில வருடங்கள் சுமூகமானதாக இருக்கவில்லை. வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெருக்கடியான காலகட்டமாக அமைந்திருந்தது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழிலை முன்னெடுத்துச் செல்லமேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

2024ஆம் ஆண்டில் ஓரளவு பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் சாதகமான பொருளாதார வளர்ச்சியை எம்மால் அடைய முடிந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் இருந்த பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்ட முடியாதுள்ளது. அதற்கு இன்னும் இரண்டு  வருடங்கள் தேவைப்படும்.

கடந்து வந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முதல் வருடம் இதுவாகும்.  அதற்காக பல கடினமாக தீர்மானங்களையும் எடுக்க வேண்டியிருந்தது. 

அனைவரும் வாழக்கூடிய பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும். தற்போது பணத்தை அச்சிடவோ, கடன் வாங்கவோ முடியாது. அதனால், வரி சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரூபாயை பலப்படுத்தி, பணவீக்கத்தைக் குறைப்பதே எமது இலக்காகும்.

பழைய பொருளாதார அடிப்படையில் நாட்டை முன்னேற்ற முடியாது. அதனால், நாட்டில் விரைவான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு புதிய பொருளாதார முறையில் நாடு கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக போட்டித்தன்மை நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். மேலும், அரசாங்கம் என்ற வகையில் வர்த்தகர்களுக்கு  முழுமையான ஆதரவை வழங்கும்.  அதற்காகவே ‘பாராட்டே’ சட்டத் திருத்தச் செயற்பாடுகளும் இவ்வருட இறுதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை பெண் வர்த்தகர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். இவர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் வழங்கும்.

இதேநேரம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பெண்களால் பெரும் பங்காற்ற முடியும். எனவே நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. எதிர்காலத்தில் டிஜிட்டல், பசுமைப் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை தயார்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.

அத்துடன் விவசாயத்  துறையை நவீனமயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் இத்துறைசார் தொழில் முனைவோருக்கு அதிக கேள்வி இருக்கும். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னேறும்போது, ​​நாமும் அதற்கமையவே முன்னேற வேண்டும்.

நாம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. புதிய தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை நாங்கள் ஏற்கனவே அமைத்துள்ளோம். அந்தச் செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு  கொண்டுச் செய்ய முடியும்.

தற்போது மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் காணி உரிமை பெற்றுகொள்ளும் 20 இலட்சம் பேரின் பங்களிப்பு நேரடியாக பொருளாதாரத்திற்கு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: