பெண் சட்டத்தரணி மீது சிறைக் காவலர்கள் நீதிமன்றில் முறையீடு!

Saturday, November 25th, 2017

சட்டத்தரணி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

ஆவாகுழுவின் தலைவர்களில் ஒருவரான நிஷா விக்டரைத் தாம் வேண்டுமென்றே தப்பிக்கவிட்டதாகத் தெரிவித்துத் தம்மைக் கடுமையான வார்த்தைகளால் அவர் திட்டினார் என்று அந்த முறைப்பாட்டில் சிறைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டுக் குழுக்களில் ஒன்றான ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவர் நிஷா விக்டர் எனப்படும் சக்திவேல் நிஷாந்தன் (வயது – 22) கொக்குவிலில் பொலிஸார் இருவரை வெட்டிய வழக்கில் முக்கிய சந்தேகநபர். சில தினங்களுக்கு முன்னர் வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கிருந்து தப்பிச் சென்றார். தீவிர தேடுதலின் பின்னர் அன்றே அவர் மல்லாகத்தில் மறைவிடத்திலிருந்து கைது செய்யப்பட்டார்.

தப்பிச் சென்ற குற்றத்துக்காக அவருக்கு மல்லாகம் நீதிமன்று ஒன்றரை வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

சந்தேகநபர் சார்பில் பெண் சட்டத்தரணியே  நீதிமன்றில் முற்பட்டு வந்தார். தனது கட்சிக்காரரைச் சிறைச்சாலை காவலர்கள் வேண்டுமென்றே தப்பிக்கவிட்டார்கள் என்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து கடும் வார்த்தைகளால் திட்டினார் எனத் தெரிவித்தே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ளது.

இதனிடையே நீதிமன்றப் பதிவாளரை மிரட்டினார் என்ற வழக்கு ஒன்றும் குறித்த பெண் சட்டத்தரணி மீது மல்லாகம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Related posts: