பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டு!

Friday, July 7th, 2023

பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நாட்டில் அதிகமாக காணப்படுவதாக  மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் -,

“பெண் ஒருவர் ஒரு தடவை ஒரு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுவிட்டால், அதன் பின்னர் அந்தப் பெண் பல தடவைகள் பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகிறார்.

ஊடகங்களினால் அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இல்லாது போய்விடுகிறது. இதனால், தனது பிரதேசத்திலும் தனது நாட்டிலும் வாழ முடியாத நிலைமை ஏற்படுகிறது.

பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதனால், சில பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளை வெளியே சொல்லாமல்கூட இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த சட்டமூலத்தின் ஊடாக இவ்வாறான குற்றங்களுக்கு எதிராக தண்டனை கிடைக்கும் என்பது சிறந்த ஒன்றாகும் என்றாலும், சாட்சியாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.

எவ்வாறாயினும், விரைவில் இந்த சட்டமூலத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: