புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இலங்கை மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும் – நீதி அமைச்சர் வேண்டுகோள்!

Friday, November 18th, 2022

“வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ள என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இலங்கை அரசால் தடை நீக்கம் செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இலங்கை மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும்.”.என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது –

“உள்நாட்டுப் போர் காரணமாக வடக்கு, கிழக்கிலிருந்து பெருமளவிலான தமிழ் மக்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் செல்வந்தர்கள் தத்தமது நாடுகளில் தனிநபர்களாவும், அமைப்புக்கள் ரீதியாகவும் செயற்பட்டு வருகின்றார்கள்.

எனினும், அவர்களுக்கிடையில் நல்லுறவு இல்லை. இங்கு தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பதுபோல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும், தனிநபர்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன.

இலங்கை விவகாரத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். எமது நாடு மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க அவர்கள் முன்வர வேண்டும். அவர்களில் சிலர் தற்போது தாமாகவே இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளார்கள்.

அவர்களைப்போல் ஏனைய புலம்பெயர் தமிழர்களும் ஒன்றுபட்டு இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும். இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் அவர்கள் தயக்கம் எதுவும் காட்டக்கூடாது.

அவர்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு உத்தவாதத்தை வழங்கும். எமது நாட்டின் வளர்ச்சிக்கு உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அனைத்துத் தரப்பினரும் உதவிகளை வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று கனேடியத் தமிழர் பேரவையினால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கடந்த புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

தற்போது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் தாம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: