புற்றுநோய் சிகிச்சைக்காக பல மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்டும் பயன்படாத இயந்திரம் – தெல்லிப்பழை வைத்தியசாலையின் பரிதாப நிலை!

Saturday, June 2nd, 2018

தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைக் கூடத்துக்கான ஊடு கருவி இயந்திரம் ஒன்று பல மில்லியன் செலவில் 2015 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் இன்றுவரை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட முடியாத நிலமையே காணப்படுகிறது என மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தெல்லிப்பழை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்காக கடந்த ஆட்சியின்போது இரு இயந்திரத் தொகுதிகள் சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் சுகாதார அமைச்சால் கொள்வனவு செய்யப்பட்டு குறித்த வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில் குறித்த இயந்திரக் கொள்வனவில் பல மில்லியன் ரூபா பணம் ஊழல் இடம்பெற்றதாக முறையிடப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் குறித்த இயந்திரங்கள் பொருத்தும் செயல்பாடு தடுக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை இடம்பெற்று தற்போது ஒரு தீர்வு எட்டப்பட்ட நிலையில் குறித்த இயந்திரங்களைப் பொருத்துவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இருப்பினும் குறித்த இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் மேலும் தாமதமடைவதற்கான சந்தர்ப்பங்களே காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தொடர்பில் துறைசார் அதிகாரிகள் கூறுகையில் மேற்படி இயந்திரத் தொகுதி பொருத்தப்பட்டு இயங்கும் பட்சத்தில் புற்று நோய்க்கான மாதாந்தக் கிளினிக் சிகிச்சைக்காகக் கொழும்பு சென்று வர வேண்டிய அவலம் நீங்கும்.

இருப்பினும் குறித்த கொள்வனவு முதல் அதனைப் பொருத்தும் பொறுப்புவரை சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட விடயம். இந்த நிலையில் தற்போது விசாரணை நிறைவின் பின்னர் பொருத்த முற்படுகையில் அந்த இயந்திரத்துக்கு ஏற்ப குளிர்சாதனம் பொருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்தனர்.

இதன் பிற்பாடு இவற்றுக்கான மின்சார இணைப்பானது தனியான தொகுதியாக மின்பிறப்பாக்கி மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனால் தற்போது அதற்கான கொள்வனவு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: