பாடசாலை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் – பாடத்திட்டத்தில் அடுத்த வருடம்முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022

2022 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இவ்வருடம் டிசம்பர் மாதம்வரை இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்றாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.

இதனிடையே

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம்முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பௌத்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் முதலீட்டு சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பரீட்சையை மையமாகக் கொண்டு கல்விக்கு பதிலாக திறமைக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த சீர்திருத்தத்தின் நோக்கமாகும்.

இதன்மூலம் புதிய படைப்பாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2022 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க

தொலைத்தொடர்பு கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், பாடசாலை மாணவர்களின் இணையவழிக் கல்வியும் தடைபடலாம் என கூறப்படுகின்றது.

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதால், இணையவழி கல்வியில் ஈடுபடும் பிள்ளைகள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, பள்ளி மாணவர்களிடையே 35% கணினி கல்வியறிவு இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆன்லைன் கல்வி தொடங்கிய பின்னர் அந்த சதவீதம் அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் அதிகரிப்பதால் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து சிறுவர்கள் ஒதுக்கப்படும் அபாயம் இருப்பதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒப்பீட்டளவில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதனால் இந்நிலை மேலும் மோசமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

Related posts: