“புரவி”யால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1796 பேர் பாதிப்பு – முல்லை.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் !

Friday, December 4th, 2020

 “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகப்படியாக 402 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்தோடு காற்றுடன் கூடிய மாழையினால் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதிகப்படியாக துணுக்காய் மாந்தை கிழக்கு பிரதேசங்களிலேயே இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் குறித்த பகுதிகள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 601 குடும்பங்களை சேர்ந்த 1796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் இலிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 210 குடும்பங்களை சேர்ந்த 533 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 181 குடும்பங்களை சேர்ந்த 619 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களை சேர்ந்த 143 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 20 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 123 குடும்பங்களை சேர்ந்த 384 பேரும், மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களை சேர்ந்த 97 பேருமாக மொத்தமாக 601 குடும்பங்களை சேர்ந்த 1796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு விசுவமடு மேற்கு பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதோடு மாவட்டத்தில் 36 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்தோடு மாவட்டத்தின் சிறிய நடுத்தர அளவிலான 75 குளங்கள் வான் பாய்கின்றன. குறிப்பாக குறித்த நீரானது வனப்பகுதிகளுக்கூடாக அதிகளவில் சென்று கிளிநொச்சி மாவட்டத்துக்குள் செல்கின்றமையால் வான் பாய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் சற்று குறைவாக காணப்படுகிறது.

இதேவேளை முல்லைத்தீவு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் புயல் தாக்க கூடும் என்ற காரணத்தினால் கடற்கரைக்கு மிக அண்மையாக இருந்தவர்கள் நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதில் இரண்டு இடைத்தங்கல் முகாம்கள் இன்று மாலை மூடப்பட்டுள்ளன. ஒரு இடைத்தங்கல் முகாமில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 2 பேர் தங்கியுள்ளனர். மற்றைய இடைத்தங்கல் முகாமில் குறித்த பகுதிகளை சேர்ந்த 92 குடும்பங்களை சேர்ந்த 282 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: