புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் – இராணுவத் தளபதி!

இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் இல்லையென்றால், அவர்கள் யுத்தத்தில் இறந்து விட்டனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. இருக்கும் முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர இருக்கின்ற முகாம்களை அகற்ற எமக்கு எந்த நோக்கமும் இல்லை.
அதேபோல காணாமலாக்கப்பட்டவர்கள் என எவருமே இல்லை. யுத்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளை புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளோம்.
சரணடைந்த நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் காணாமாலாக்கப்பட்டதாகக் கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால் அந்த நபர்கள் இறந்திருக்க வேண்டும்.
யுத்தத்தில் இறந்தவர்களில் எமக்கு கிடைத்த சடலங்களை செஞ்சிலுவை சங்கம் ஊடாக ஒப்படைத்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|