புதுக்குடியிருப்புக்கு கடமைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்கு தனியாகப் பேருந்து வேண்டும்!

Sunday, December 3rd, 2017

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்களில் 35 பேர் வரையில் யாழ்ப்பாணத்தில் இருந்தே வருகின்றனர். அதனால் அவர்களுக்கென தனியான போக்குவரத்துச் சேவை ஒன்று ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது;

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்களில் 35 பேர் வரையில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் மேலும் பலர் வவுனியாவில் இருந்துமே பணிக்கு வருகின்றனர்.

அங்கிருந்து வரும் குறித்த பேருந்துகள் 9 மணியைக் கடந்த பின்னரே புதுக்குடியிருப்பை வந்தடைகின்றன. இதனால் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

பணியாளர்களின் நன்மை கருதி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இருந்து புறப்படும் பேருந்துகள் காலை 8.30 மணிக்கு புதுக்குடியிருப்பை வந்தடையுமாறு தனியான போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை முன் வைக்கின்றனர்.

குறித்த கோரிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இரு மாவட்டங்களில் இருந்தும் ஊழியர்களும் தங்கு தடையின்றி அலுவலகத்துக்கு கடமைக்கு சமூகமளிப்பதோடு சீரான பணியை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் அண்மையில் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பேசப்பட்டது.

இது தொடர்பில் இலங்கைப் போக்குவரத்துச் சபையினரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பேருந்து சேவைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: