புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மட்டுமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Sunday, March 24th, 2024

புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்’. 

மேலும் ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றதாக  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்த போதும், தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (23) நடைபெற்ற “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்” என்ற இச்சந்திப்பில் நாட்டின் எதிர்காலம் மற்றும் தூரநோக்குக் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இளையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்..

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் என்றும் எனவே, தங்களினதும் நாட்டினதும் எதிர்காலத்திற்கான சிறந்த வழி எதுவென்பதை நாட்டின் இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

“சரிவடைந்திருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். அவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் நாட்டைப் பொறுப்பேற்கத் தயங்கினர். நான் பொறுப்பேற்காவிட்டால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்தேன். அந்த நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றால் அரசியல் நலன்களை இழக்க நேரிடுமென பலரும் நினைத்தனர். அவர்கள் தங்களைப் பற்றி மட்டும் சிந்தித்தனர். நான் நாட்டை பொறுப்பேற்காவிடின் எமக்கான நாடொன்று எஞ்சியிருக்குமா என்பதையே நான் சிந்தித்தேன்.

நாடாளுமன்றத்தில் தனியொரு ஆசனம் மட்டுமே இருந்தது. எனக்கு இருந்த ஒரே பிரச்சினை அதுவாகவே இருந்தது. அதற்கு முன்னதாக நான் டிசம்பர் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடியிருந்தேன். உலக வங்கியுடனும் கலந்தாலோசித்தேன்.

அதுபற்றி முன்னாள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு கூறினேன். அத்துடன் கடந்த தேர்தல் சமயத்தில் நாட்டில் பணமில்லை என்பதை ஐ.தே.க அறவித்தது. குறைந்தபட்சம் 3000 மில்லியன் டொலர்களையாவது கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியமென   கூறியது. அப்போது மக்கள் எமக்கு வாக்களிக்க வில்லை. ஆனால்  2021 ஆம் ஆண்டில் நாம் கூறியவை உண்மையாக நிகழ்ந்தன.

மேலும், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் கிராமங்களைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனூடாக விவசாய ஏற்றுமதி இலக்குகளை விரைவில் அடையலாம்.  இதன் போது புதிய பயிர்களை விளைவிப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியிருப்பதோடு, தூரியன் உற்பத்தி குறித்து தாய்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடிள்ளோம். மேலும், இந்நாட்டில் பயிர் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும்.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான சாத்தியக்கூறுகள் நாட்டில் அதிகமாக உள்ளன. அதனால் காற்றாலை மற்றும் அனல் மின்சாரத்திற்கான வலுசக்தி  உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தி, தேவைக்கு அதிகமான மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடியும். அத்துடன் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் முதலீட்டு வலயத்தை உருவாக்க ஆயிரம் ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மகாவலி ஏ – பீ வலயங்களை அபிவிருத்தி செய்து நவீன விவசாயத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

எனவே, நாடு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

000

Related posts: