புதிய அரசியலமைப்பு வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, November 23rd, 2021

புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் எவ்வித இரகசியமான விடயங்களும் இல்லை எனவும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் –  உலகளாவிய கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கினோம். மக்களின் பாதுகாப்பிற்காக நாம் உரிய நேரத்தில் சகல தீர்மானங்களையும் மேற்கொண்டோம் என்பதனை நாம் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

அப்பணியை நிர்வகிப்பதற்காக பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட பணிகளை நினைவூட்டும் முகமாகவே நான் இவ்விடயத்தை கூறுகின்றேன்.

கொவிட் தொற்றின் ஆரம்பத்தில் எமது அரசாங்கம் அத்தியவசிய சேவைகளுக்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவியது. அந்த ஜனாதிபதி செயலணியின் ஊடாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எமது கண்காணிப்பின் கீழ் மக்களின் அத்தியவசிய சேவைகளை நிறைவேற்றுவதற்கும், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு நாளின் 24 மணிநேரமும் பிரதமர் அலுவலகம் செயற்பட்டது என்பதை நாம் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.

அத்துடன் நாம் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்தோம். மக்களுக்கு அத்தியவசிய சேவைகள் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்நின்றோம். வைத்தியர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோர் அதற்காக தமது கடமைகளை நிறைவேற்றினர்.

கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. கொவிட் தொற்றிலிருந்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் இம்முறை சமர்பித்தார்.

மக்களின் சார்பிலான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நாட்டிற்கு தேவை. இந்த கடினமான சூழ்நிலையில் அம்மக்கள் மீண்டெழக் கூடியதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

2019ஆம் ஆண்டில் நாம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரமொன்றையே பொறுப்பேற்றோம் என்பதையும் நினைவுகூர வேண்டும். இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழமை போல் சொந்த அரசியலுக்காக விவாதம் செய்வதை பார்த்தோம். இருப்பினும் எதிர்கட்சிகளின் நேர்மறையான கருத்துகளுக்கு நாம் செவிமடுக்கிறோம். நீங்கள் சாதகமான கருத்துக்களை கூறினால் அவற்றிற்கு செவிமடுக்க நாம் தயாராக இருக்கிறோம். இத்தருணத்தில் நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் கூட்டாக தீர்மானங்களை எடுக்க வேண்டும். மக்களுக்காக அந்த கடமையை நிறைவேற்றுவதற்கு இந்த உயரிய நாடாளுமன்றத்தின் சகல உறுப்பினர்களுக்கும் திறன் உள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான புதிய வணிகங்களைப் பதிவு செய்யும் தொழில்முனைவோரிடமிருந்து நாம் எந்தப் பதிவுக் கட்டணத்தையும் வசூலிக்கப் போவதில்லை. புதிய வர்த்தக சிந்தனைகளுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்ப கைகோர்க்குமாறு எமது நாட்டு இளைஞர்களை அழைக்கின்றோம். மேலும் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


உலக நாடுகள் வரிசையில் முன்னிலையில் இலங்கை - அவ வேள்ட் இன் டேட்டா என்ற இணையத்தளம் தெரிவிப்பு!
பாரதியஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் விஜயம் – பல்வேறு கலந்துரையாடல்களிலும் பங்...
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு - பெப்ரவரி இறுதி வரை வாய்ப்பு - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க ...