தீர்வுகளைத் தராத ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள்! –  மக்கள் ஆதங்கம்!!

Monday, June 13th, 2016

ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும் நடைபெற்று முடிந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களால் எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லையென கூட்டங்களில் பங்கெடுத்த மக்கள் பிரதிநிதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட, பிரதேச செயலகங்களில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் நடைபெற்று முடிவடைந்தபோதிலும் இக்கூட்டங்களில் ஒன்றில் கூட ஆக்கபூர்வமான முடிவுகளோ தீர்மானங்களோ எட்டப்படவில்லையென்பது, இணைத்தலைமைகளின் இயலாமையை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது என்றும்

இதுவரையில் நடைபெற்று முடிந்த யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது இணைத்தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக சமூகமளித்திருக்கவில்லை என்றும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாத இவர்களுக்கு நாளாந்தம் தாம் எதிர்கொள்ளும் துன்ப துயரங்கள் எங்கே விளங்கப்போகின்றது எனவும் மக்கள் பிரதிநிதிகள் ஆதங்கத்துடன் தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஈழக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது –

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருவருக்கொருவர் தமக்கிடையே வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுவதாலும், முரண்பட்டுக் கொள்வதாலும் பொதுமக்களாகிய எமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கோ, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கோ அவர்களிடம் ஆற்றலோ அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை.

இது ‘இருந்ததையும் கெடுத்தானாம் கொள்ளிக்கண்ணன்’ என்ற கதையாகவே போய் முடிந்துள்ளது. என்றும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதனைத் தவிர சில பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடாத்துவதற்கென இணைத்தலைவர்கள் நால்வர் நியமிக்கப்பட்ட போதிலும் அநேகமான கூட்டங்களை தனியொருவரே தலைமை தாங்கி நடத்தியிருந்த பரிதாபமும் நடந்துள்ளதாக தெரிவிக்கின்ற மக்கள், இதுவரை நடந்த கூட்டங்கள் பெயரளவில் தான் நடந்தேறியுள்ளன.

ஆரோக்கியமான கூட்டங்களாக எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை என்றும் என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே யாழ்.மாவட்ட செயலகத்தில் இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தீர்வுகள் எதுவும் எட்டப்படாமலே நடந்து முடிந்துள்ளது.

கூட்டத்தின் இடைநடுவே இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சென்றுவிட கூட்டமும் உப்புச்சப்பில்லாமலும், முற்றுப்பெறாமலும் நிறைவு பெற்றது.

இவ்வாறு ஒழுங்கமைக்கப்படாத ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களால் பாதிக்கப்படுவதும், ஏமாற்றமடைவதும் பொதுமக்களாகிய நாம்தான் என்பதை, எப்போது இந்த சுயலாப அரசியல்வாதிகள் உணரப்போகின்றார்கள் என்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே 2010இல் இருந்து 2014ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னிறுத்தியும் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும்

நான் அமைச்சராகவும், இணைத்தலைவராகவும் இருந்து பல்வேறு செயற்றிட்டங்களையும் பணிகளையும் முன்னெடுத்திருந்ததையும், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அழிவுகளிலிருந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியிருந்ததையும்

முன்னைய காலங்களில் எனது இணைத்தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் முடியுமானவரை அந்த இடத்திலேயே தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளேன் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் இவற்றை மனச்சாட்சி உள்ளவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் நான் திடமாக நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

 13450148_1552862658343493_5036968739386253858_n

 13428400_1552862681676824_1288032517689423308_n

13407103_1552862725010153_3512884130728506870_n

13442166_1552862768343482_5756284817443168255_n

 

Related posts: