புதர்மண்டிக் காணப்படும் காணிகளை புனரமைப்பு செய்து கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ்!

Monday, June 25th, 2018

யாழ் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் கவனிப்பாரற்று புதர்மண்டிக் காணப்படும் காணிகளால் அதிகளவு சமூகச் சீரழிவுகள் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் குறித்த காணிகளை யாழ் மாநகரசபை பொறுப்பேற்று துப்புரவு செய்து தனது பராமரிப்பில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகரசபையின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ் மாநகரை அண்டிய பகுதிகளில் வெளிநாடுகளில் உள்ளவர்களதும் இதர மாவட்டங்களுக்கு சென்று வாழ்பவர்களதும் காணிகள் பல புதர்மண்டியநிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறான காணிகளால் சிலர் அதை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அத்துடன் அக்காணிகளில் உள்ள பற்றைகளை மறைவிடமாகக் கொண்டு சமூக சீரழிவு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
எனவே குறித்த காணிகளை யாழ் மாநகரசபை பொறுப்பெடுத்து அவற்றை துப்புரவு செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுடன் குறித்த காணிகளின் உரிமையாளர்கள் திரும்பி வந்து உரிமை கோரும்பட்சத்தில் அவற்றை துப்பரவு செய்த மற்றும் பராமரித்த செலவுகளை பெற்றுக்கொண்டு மீள ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வதனூடாக சுகாதாரத்தையும் சமூக சீரழிவுகளையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: