புகைப்பரிசோதனை இல்லாவிடினும் 500 ரூபா தண்டம்!

Tuesday, July 17th, 2018

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காகச் சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் அதிகரிக்ப்பட்டுள்ளது.

வாகனப் புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்ல தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்ற புதிய போக்குவரத்து விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அந்தச் சான்றிதழ் வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதனை போக்குவரத்தின்போது பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிவேக சாரத்தியதுக்கு இதுவரை ஆயிரம் ரூபா விதிக்கப்பட்ட தண்டம் நேற்று முதல் 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாக வாகன சாரத்தியத்துவத்தில் விடும் தவறுகள் தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுவரை அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகனத் தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் சில நீக்கப்பட்டு மேலும் பல புதிதாக இணைக்கப்பட்டு தற்போது 33 தவறுகளை உள்ளடக்கும் வகையில் அது செயற்படுகின்றது.

இதற்கமைவாக இந்தத் தண்டப்பணம் 30 தொடக்கம் 50 சதவீதம் வரையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக வேகத்துடன் வாகனத்தைச் செலுத்துவதற்கான தண்டப்பணம் 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் உத்தரவுகளுக்குச் செவிமடுக்காமல் செயல்படும் சாரதிகளுக்குத் தண்டப்பணம் 2 ஆயிரம் ரூபாவாகவும் ஆலோசனை அனுமதிப்பத்திரம் அல்லாமல் ஆலோசனைப் பணிகளில் ஈடுபடுவதற்கான குற்றச் செயல்களுக்கு ரூபா 2 ஆயிரம் என்ற ரீதியில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 489 பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய தண்டனை விதிப்பு தொடர்பான குற்றச்சாட்டு அடங்கிய விபர ஆவணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வாகன போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts: