பிறப்பு, இறப்பு ,விவாக சான்றிதழ்களை எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு!

Thursday, August 12th, 2021

நாட்டின் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணி அனுமதி மற்றும் உறுதி பத்திரங்களும் வெகு விரைவில் ஒன்லைன் முறைமை மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “மக்கள் மயப்படுத்தப்பட்ட டிஜிட்டல் அரச முறைமை” எனும் திட்டத்தினை நனவாக்கும் வகையில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர்  தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயக திணைக்களத்தின் பரிய முன்னெடுப்பான ஒன்லைன் மூலம் சேவை வழங்கும் இந்தத் திட்டம் 2021 ஓகஸ்ட் 02 ஆம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பதிவாளர் நாயகம் மத்துமபண்டார வீரசேகர, 1960ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில் சேமிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் எந்த பிரதேசத்தில் இருந்தும் இந்த சேவையினை இலகுவான முறையில் பெற்றுக் கொள்ள வசதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஒருமையப்படுத்தப்பட்ட முறைமையில் 1960 ம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான் சுமார் 36 மில்லியன் கோணங்களை ஸ்கேன் செய்யப்பட்ட தரவுகளாக வைத்துள்ளது. இதன் மூலம் இலங்கை பிரஜைகள் தங்களது பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழை நாட்டின் எந்த ஒரு பிரதேசத்தில் இருந்தும் இலகுவாக பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்ட முறையில் விண்ணப்பிக்கப்பட சான்றிதழ்களை, விரைவுத் தபால் மூலமோ அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்தின் மூலமோ பெற்றுக்கொள்ள இந்தத் திட்டம் வசதியளிப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: